Thursday, July 28, 2011

படித்ததில் பிடித்தது...............

biryani “தேவையில்லாம அலையப் போறே, உன் இஷ்டம்” என்ற ரவியை பார்த்து “வேஸ்ட் செய்யறது எனக்கு பிடிக்காதுடா.. இதே நேரத்தில...” என்று ஆரம்பித்தவுடன்.. “என்ன.. இதே நேரத்தில எத்தனை பேருக்கு சாப்பிட ஒரு வாய் கூட கிடைக்காம கஷ்டப்படுறாங்க தெரியுமா அதானே.. ஓகே.. ரைட், உன் பாடு அந்த சாப்பாட்டு பாடு.” என்று வண்டியை கிளப்பிக் கொண்டு போய்விட்டான்.

ரவியும் நானும் நெருங்கிய நண்பர்கள். மாசத்திற்கு ஒரு முறை சம்பளம் வாங்கிய முதல் வாரத்தில் ஏதாவது ஒரு ஹோட்டலை தேர்ந்தெடுத்து, மதிய சாப்பாட்டை ஒரு கட்டு கட்டுவது எங்களது வழக்கம். அப்படி சாப்பிட வந்த ஹோட்டலில் கோதுமை பரோட்டா மிகப் பிரபலம். ஆளுக்கு நாலு பரோட்டா, சிக்கன் சைட் டிஷ் ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு, இன்னும் கொஞ்சம் வயிற்றில் இடம் இருக்கும் போல இருந்த்தால் ஆளுக்கொரு மட்டன் பிரியாணியை ஆர்டர் செய்தோம். நான் ஒன்று போதும் என்று சொன்ன போது “பரவாயில்ல.. நல்லா சாப்பிடுடா” என்றான். ஒரு கால் ப்ளேட் கூட சாப்பிட்டிருக்க மாட்டோம். பிரியாணி அருமையாய் இருந்தும் சாப்பிட முடியவில்லை. வயிறு ஃபுல். ரவி சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு எழுந்துவிட்டான். எனக்கு மனசே ஆறவில்லை. இந்த ஒரு வேளை சாப்பாடு கிடைக்காமல் எவ்வளவோ பேர் அலைகிறார்கள். நாம் காசைக் கொடுத்துவிட்டு இப்படி வீணாக்குவது அநியாயம் என்று தோன்றியது. சர்வரை கூப்பிட்டு என்னுடயதையும் சேர்த்து பார்சல் செய்து தரச் சொன்னேன். என்னால் இந்த பார்சலை வீட்டிற்கு கொண்டு போக முடியாது. ஏன் என்றால் எங்கள் வீட்டில் சுத்த சைவம். அதனால் தான் ரவி அப்படிச் சொன்னான் “தேவையில்லாமல் அலையப் போறே” என்று.

ஒரு சாப்பாட்டு பார்சலை கொடுக்க ஒரு பிச்சைக்காரர்கள் கூடவா இருக்க மாட்டார்கள்? என்று யோசித்தபடி வண்டியை கிளப்பினேன். காற்றில் பார்சல் பிரியாணியின் வாசம் மூக்கை துளைத்தது. ஒரு நல்ல பிரியாணியை யாரோ ஒருவர் சாப்பிடப் போகிறான் என்று நினைத்தபடி வண்டியை மெல்ல ஓட்டியபடி சுற்றிலும் யாராவது தென்படுகிறார்களா? என்று பார்த்தபடி சென்றேன்.

எனக்கு பிச்சை போடுவது பிடிக்காது. ஆனால் பசி என்று யாராவது பிச்சைக் கேட்டால் அவர்களை கூட்டிக் கொண்டு போய் சாப்பாடு வாங்கி தந்துவிடுவேன். அவர்கள் சாப்பிடும் வரை காத்திருந்து பார்த்துவிட்டுத்தான் கிளம்புவேன். ஏனென்றால் ஒரு முறை ஒரு வயதான கிழவி பசி என்று பிச்சையெடுக்க பக்கதிலிருந்த ஒரு கடையில் எலுமிச்சை சாத பாக்கெட் ஒன்றை வாங்கி கொடுத்துவிட்டு, பக்கத்தில் இருந்த ஒரு இட்த்திற்கு போய் வரும் போது கிழவி அந்த டிபன் கடையில் நின்று கொண்டிருந்தாள். அருகே போய் என்ன செய்கிறாள் என்று பார்த்த போது அந்த பொட்டலத்தை கொடுத்துவிட்டு காசு வாங்கிக் கொண்டிருந்தாள். அன்றிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொடுத்தால் கூட இருந்து சாப்பிடுவதை பார்த்த பின் தான் நடையை கட்டுவேன். இப்படி செய்பவர்களைப் பார்த்தால் கோபம் கூட வருவதுண்டு. கொஞ்சம் யோசித்த பின் சரி பரிதாப்படுகிறவர்கள் அத்தனை பேரும் என் போல சாப்பாடு வாங்கிக் கொடுத்தால் அவர்களும் எவ்வளவுதான் சாப்பிடுவார்கள் என்று சமாதானப் படுத்திக் கொண்டாலும், நான் சாப்பாடு வாங்கிக் கொடுத்தால் சாப்பிடுபவர்களுக்கு மட்டும்தான் என் தயாள குணமெல்லாம்.

சில சமயம் இம்மாதிரியான பிச்சைக்காரர்களிடம் காசு கிடையாது, சாப்பாடு மட்டும்தான் என்று சொன்னால் ஏதும் பேசாமல் அடுத்த ஆளை பார்க்க போய் விடுபவர்களையும் பார்த்திருக்கிறேன். பிச்சையெடுப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு விதம். சில பேர் பார்க்க டீஸெண்டாய் இருந்து கொண்டு “சார்.. ஒரு பத்து ரூபாய் ஹெல்ப் செய்ய முடியுமா?” என்று ஸ்டைலான ஆங்கிலத்தில் ஸ்பென்ஸர் ப்ளாசாவின் வாசலில் பிச்சையெடுத்ததையும் நான் பார்த்திருக்கிறேன்.

யோசித்துக் கொண்டே சுற்றிலும் பார்த்துக் கொண்டு வந்த்தில் சாப்பாடு கொடுக்க கூடிய அளவில் யாரையும் கண்ணில் காணவில்லை. அசோக்பில்லர் சிக்னலின் ஓரமாய் வண்டியை நிறுத்தி காத்திருந்தேன் வழக்கமாய் அடிக்கடி சிக்னலில் வடநாட்டு அழுக்கு பெண்கள் முதுகில் குழந்தைகளோடு அங்கு பிச்சையெடுப்பதை பார்த்திருக்கிறேன். கால் மணி நேரம் நின்றதுதான் மிச்சம் ஒருத்தரையும் காணவில்லை. சரி.. சரவண பவன் பக்கம் போய் பார்ப்போம். அங்கே ஸ்கூல் வாசலில் சில பேர் இருப்பார்கள் என்று அங்கே போய் கொஞ்ச நேரம் நின்றேன். ரோடு முழுவதும் மரங்களாய் இருந்த்தால் நிற்கும் கஷ்டம் தெரியவில்லை. ரோடே வெறிச்சோடியிருந்த்து. சரவண பவன் வாசலில் மட்டும் கொஞ்சம் ஆள் நடமாட்டமிருக்க, வெற்றுப் பார்வை பார்த்தபடி வண்டியின் மேல் உட்கார்ந்தேன். அப்போது பக்கத்திலிருந்த ஒரு தெருவிலிருந்து ஒருவன் கலைந்த தலையோடு, அவனுடய ஒல்லியான தேகத்திற்கு கொஞ்சம் கூட சம்மந்தமில்லாத ஒரு பெரிய அழுக்கு நீல சட்டையை, பொத்தான்களை மாற்றி போட்டுக் கொண்டு, மேலும் அழுக்கான லுங்கியோடு அங்கும் இங்கும் பார்த்தபடி வர, அவனைப் பார்த்த்தும் இவன் தான் சரியான ஆள் என்று முடிவு செய்து, அவன் அருகில் போய் “தம்பி... சாப்பாடு இருக்கு.. பிரியாணி.. சாப்பிடுறீங்களா?” என்று பார்சனை அவன் முகத்திற்கு நேராய் நீட்டிய அடுத்த விநாடி, அவன் முகம் மாறி... ‘யோவ்.. நான் உன்னை சாப்பாடு கேட்டேனா? இல்ல என்னப் பார்த்தா பிச்சைக்காரன் மாதிரியிருக்கா? த்தா.. கிளம்பி வந்திடறானுங்க. பெரிய லார்டு லபக்குதாஸ் மாதிரி... அதென்னா மூக்குக்கு முன்னாடி பிரியாணி பொட்டலத்தை காட்டி பேசுறே.. நானெல்லாம் பிரியாணி சாப்பிட்ட்தேயில்லியா? நான் யார் தெரியுமா? அதோ அங்க வீடு கட்டுறாய்ங்க இல்ல அங்க வேலை செய்யுறேன். அழுக்கா ஆளிருந்தா பிச்சை போட்டுருவீங்களோ?” என்று திட்டியபடி போய்விட்டான்.

நமக்கு ஏன் இப்படி நடக்குது? பேசாமல் ரவி சொன்னா மாதிரி ஹோட்டல்லயே விட்டுட்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது. ஏதோ பெரிய தர்ம்ம் செய்வதாய் நினைத்துக் கொண்டு சாப்பிட்ட சாப்பாட்டிற்கு வீட்டிற்கு போய் ஒரு குட்டி தூக்கம் போட்டிருக்கலாம். தேவையில்லாமல் கண்டவனிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறேன்.

”என்ன தம்பி பிரச்சனை?” என்ற குரல் வந்த திசையை பார்த்தேன் . அருகில் இருந்த ப்ளாட்டின் வாட்ச்மேன். நடந்ததை சொன்னேன். “ஓ.. சரி விடுங்க நான் சாப்பிடுறேன்” என்றதும் சட்டென சந்தோஷம் வந்தது. அப்பாடி ஒரு வழியாய் சாப்பாடு வீணாகவில்லை. “இந்தாங்க.. பிலால் கடை பிரியாணி” என்று சொல்லிக் கொடுத்தேன். வாட்ச்மேன் நெருப்பை தொட்டது போல “அய்யோ.. பிரியாணியா.. நான் சுத்த சைவங்க..நல்ல வேலை சொன்னீங்க” என்று விதிர்த்துப் போய் விலகி நின்றார். என்ன சோதனைடா.. என்று என்னையே மனதுக்குள் திட்டியபடி, வண்டியை கிளப்பினேன். அருகில் ஆஞ்சநேயர் கோயில் இருக்கு அங்கே சில பிச்சைக்கார்ர்களை பார்த்திருக்கிறேன். அங்கே போய் பார்கலாம் என்று போன போது கோயில் நாலு மணிக்குத்தான் திறப்பார்கள் என்பதால் வாசலில் யாருமில்லை.

நாட்டில் பிச்சைக்காரர்களே இல்லாமல் போய்விட்டார்களா? எல்லோரும் சுபிட்சமாய் இருக்கிறார்களா? என்று என்னையே கேட்டுக் கொண்டேன். சைதாப்பேட்டை காரணீஸ்வர்ர் கோயில் வாசலில் நிரந்தரமாய் இரண்டு மூன்று தொழு நோயாளி பிச்சைக்காரர்களை பார்த்திருக்கிற ஞாபகம் வர, உடனே வண்டியை சைதாப்பேட்டைக்கு விட்டேன். வாசலில் வயதான பூக்காரி மட்டுமேயிருந்தாள்.

“என்னா தம்பி?”

“இல்ல இங்க ரெண்டு தொழு நோயாளி பிச்சைக்காரங்க இருந்தாங்க இல்ல அவங்க இல்லையா?’ என்றேன்.

“ஓ.. அவங்களா.. உடம்புக்கு ரொம்ப முடியாம ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்க” என்றாள். கொஞ்சம் வெறுப்பாய் கூட வந்தது. சாப்பாடு வீணாக்க்கூடாது என்கிற ஒரு கொள்கைக்காக இவ்வளவு தூரம் நேரம், எல்லாவற்றையும் வேஸ்ட் செய்ய வேண்டுமா? என்ற கேள்வி எனக்குள் ஓடியது. பேசாமல் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு போய்விடுவோமா? என்ற யோசனை வந்து குப்பைத் தொட்டியை நோக்கி வண்டியை விட்டேன். குப்பைத் தொட்டியில் போடுவதற்கு மனமேயில்லை. கொஞ்சம் கொள்கையில் தோற்று விட்டோமே என்ற வருத்த்த்தில் கண் கலங்கக் கூட செய்தது. பக்கத்திலிருந்த ஒரு பிரியாணிக் கடையிலிருந்து அண்டாவில் “டன்..டன்’ என கரண்டியால் தட்டும் சத்தம் கேட்டது. மிகப் பிரபலமான பிரியாணிக்கடை. மக்கள் கடையின் வாசலில் க்யு கட்டாத குறையாய் அன்றோடு பிரியாணி கிடைக்கவே கிடைக்காது என்பது போல ஆலாய் பறந்து கொண்டிருக்க, அந்த கூட்ட்த்திலிருந்து இரண்டு சிறுவர்கள், கால்களின் இடுக்குகளிலிருந்து வெளியே வந்தார்கள்.

பையனுக்கு ஒரு பத்து வயதிருக்கும், இன்னொரு பெண் குழந்தை நான்கைந்து வயதிருக்கும். அழுது கொண்டே வந்தாள். “த.. அளுவாத.. அடுத்த வாரம் வாங்கித் தரேன். இவனுங்க திடீர்னு விலையேத்திருவானுங்கன்னு எனக்கென்ன சோசியமா தெரியும்?” என்று சமாதானப் படுத்திக் கொண்டிருக்க, அவளோ விடாமல் கைகால் உதைத்து நடு ரோடென்றும் பாராமல் புரண்டு அழ, அவன் செய்வதறியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, நான் அவனருகில் சென்று “தம்பி.. பாப்பாவுக்கு என்ன பிரியாணிதானே வேணும். நான் தர்றேன். என் ப்ரெண்டுக்காக வாங்கினேன். அவரு வேணாம்னுட்டாரு.. இந்தா எடுத்துக்க” என்று அவனிடம் நீட்டினேன். கொஞ்சம் யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாக, கை நீட்டி வாங்கிக் கொண்டான். “யேய்.. சீதேவி.. தபாரு.. பிரியாணி இந்தா வா சாப்புடலாம்” என்று அவளிடம் காட்டிய பிறகு அவள் முகமெல்லாம் பல்லாய் கண்களில் நீருடன், ரோட்டின் புழுதியிலிருந்து ஆவலாய் கை நீட்ட, “த.. சீ.. போய் கை கழுவினு வா..” என்று அருகில் இருந்த தெருக்குழாயை காட்ட, அவளைவிட பெரிதாய் இருந்த பைப்பின் கைப்பிடியை பிடித்து தொங்கியபடி பைப்பை அடிக்க, தண்ணீர் வந்த்து ஓடிப் போய் கையை கழுவிக் கொண்டே எங்களையும் பார்த்து சிரித்தாள். நான் கிளம்ப எத்தனித்த போது “சார்... இந்தாங்க” என்று அவனுடய ட்ராயர் பாக்கெட்டிலிருந்து பத்து ரூபாய் நோட்டாய் ஒரு கொத்தை கொடுத்து, “இதில எழுபது ரூபாய் இருக்கு. பத்து ரூபாய் இல்லைன்னுதான் திரும்ப வந்திட்டேன். நாளைக்கு இந்த கடையாண்ட வந்தீஙக்ன்னா கொடுத்திடறேன். தங்கச்சி ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்திச்சு. அதுக்காக சேர்த்து வச்சு வாங்கலாம்னு வந்தேன்” என்று என் கையில் காசை வைத்துவிட்டு கடையின் ஓரத்தில் வைத்திருந்த குப்பை பொறுக்கும் பையை முதுகில் மாட்டியபடி, இன்னொரு கையில் பிரியாணியையும், தங்கையையும் ஒரு சேர கைபிடித்து அழைத்துக் கொண்டு போனான். கையில் இருந்த கசங்கிய பத்து ரூபாய் நோட்டுக்களை எண்ணத் தோன்றாமல் நிறைவாயிருந்தது மனது. சாப்பாடு வேஸ்டாகவில்லை.

Sunday, July 17, 2011

கண்ணொரு எழுத்தாணி..............



இரண்டு கைகளால் எழுதத்தெரிந்தவர்
மகாத்மா காந்தி.................
இரண்டு கண்களால் எழுதத்தெரிந்தவள் என்
மகத்தான காதலி................

அழகு...........



மீன்களுக்கு கழுத்து கிடையாது....................
மலேய மொழிக்கு எழுத்து கிடையாது..............
உன் அழகுக்கு அடுத்து கிடையாது...........................

இரண்டாவது நிலா...........


நாசாவிற்கு முன் நான் கண்டுபிடித்துவிட்டேன்,
செவ்வாய் கிரகத்திற்கு அடுத்து நம் பூமிக்கும் இரண்டு
நிலா கிடைத்துவிட்டது நீ பூமியில் பிறந்தவுடன்..........

Tuesday, July 12, 2011

படித்ததில் பிடித்தது ......


கடவுளிடம் பிராத்தனை செய்வதற்கும்
பெண்களிடம் காதலை சொல்வதற்கும்
இன்னும் சரியான மொழி கண்டறியப்படவில்லை ................

கடவுளின் தவறுகள் ??????


காதல் என்பது கடவுளால் உண்டான
இரண்டாவது தவறு ,ஆமாம்!!!!!!!!!!!!!
பெண்களே முதல் தவறு ......ஆனால்
இரண்டுமே அழகான தவறுகள் !!!!!!!!!