Sunday, March 31, 2013

தலைவா!





வெற்றி வந்து குவிந்தபோது கர்வமில்லை. தொடர் தோல்விகள் தடுமாறச் செய்ததில்லை. தலைவர்கள், இளைஞர்கள் மேல் நம்பிக்கை வைத்தால்  எதிலும் வெற்றி நிச்சயம். அதற்கு நல்லதோர் உதாரணம், இந்தியாவின் கிரிக்கெட் கேப்டன் தோனி.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிக டெஸ்ட் வெற்றிகளைக் குவித்த கேப்டனாக முடிசூட்டியுள்ளார் தோனி. முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் 21 டெஸ்ட் வெற்றிகள் எனும் சாதனையை முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 22 வெற்றிகள். ஒருநாள்போட்டிகளில் 77 வெற்றிகள். டி 20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை  வாங்கித் தந்தது என தோனி தலைமையில் இந்திய அணி தொடர்ந்து சாதித்து வந்திருக்கிறது.

 ‘என்னுடைய அணியில் சச்சின் எவ்வளவு முக்கியமானவரோ... அதே அளவுக்கு விராட் கோலியும் இஷாந்த் ஷர்மாவும்... எந்த ஒரு வீரரும் மிக மிக முக்கியமானவர்களே. இதில் ஒருநாளும் மூத்தவர், இளையவர் என்கிற பாகுபாடு கிடையாது.

அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனித் திறமைகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் அணியில் முக்கியமான பொறுப்புகள் உண்டு. ஒரு கேப்டனாக அவற்றை சரியான அளவில் திட்டமிட்டுப் பயன்படுத்துவது, அவர்களுடைய பொறுப்பினை உணர்த்துவதுதான் என்னுடைய வேலை. அதனால், என்னுடைய வெற்றி எதுவுமே எனக்கு மட்டுமே சொந்தமானதல்ல... அது அணியின் ஒவ்வொருக்குமானது.’

தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் நம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி கூறியவைதான் இது. எவ்வளவு உண்மையான வார்த்தைகள். ஓர் அணியை எப்படி வழிநடத்திச் செல்லவேண்டும் என்பதை இதைவிட சிறப்பாக சொல்லிவிட முடியாது. வெற்றிகளை சக வீரர்களுக்கு பங்கு போட்டுக் கொடுத்துவிட்டு... தோல்விகளுக்கு தன்னை மட்டும் பொறுப்பாக முன்னிறுத்துகிற கேப்டன்களைக் காண்பது மிக மிக அரிது.

தொடர் தோல்விகளைக் கண்டு பயந்து, கேப்டன் பதவிக்கே கும்பிடு போட்டு ஓடுகிறவர்களுக்கு மத்தியில், எதையும் எதிர்த்து நிற்கிற வித்தியாசமான கேப்டன் தோனி. இந்தத் தன்னம்பிக்கையும் தைரியமும்தான் அவருடைய வெற்றியின் ரகசியம்.

வெற்றிகளைக் குவிக்கும்போது, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதும்  தோல்வியடையும்போது, கோபத்தோடு கற்களை வீசுவதும் இந்திய ரசிகர்களின் இயல்பு. கவாஸ்கர், கபில்தேவ் காலத்திலிருந்தே அப்படித்தான். இதற்கு முன்பு என்னதான் சாதனைகளை செய்து குவித்திருந்தாலும் இன்று நீ என்ன செய்தாய் என்பதுதானே இங்கே வேதமந்திரம்?

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மண்ணைக் கவ்வியபோது, தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்கிற குரல்கள், நாடெங்கும் ஒட்டுமொத்தமாக ஒலித்தன. தோனி புன்னகைத்தார்.

இதோ இப்போது ஆஸ்திரேலிய அணியை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்திவிட்டார் தோனி. உடனே கவாஸ்கர் உணர்ச்சிவசப்பட்டு, ‘2019வரை தோனிதான் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கவேண்டும்’ என்றார். அதற்கும் தோனி அதே புன்னகையைத்தான் பதிலாக தருகிறார். வெற்றி, தோல்விகள் இந்தக் கேப்டனை ஒன்றுமே செய்வதில்லை.

‘தோனி எதையும் தாங்கிக்கொள்பவர். தன்னுடைய பொறுப்பினை அவர் எப்போதும் தட்டிக்கழித்ததேயில்லை. தோல்வியின்போது, பயந்து ஓடியவர் இல்லை. தன்னுடைய தவறுகளை மிக தைரியமாக ஒப்புக்கொண்டு, அதை சரிசெய்ய முனைகிறவர். தோனி ஒரு ஸ்பெஷல் டேலண்ட். ஒரு ஸ்பெஷல் மனிதர்’ என்று புகழாரம் சூட்டுகிறார், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சாப்பல்.

2007ம் ஆண்டு இந்தியா வந்திருந்த ஆஸி அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் கும்ப்ளே காயம் காரணமாக விலகிவிட... துணைக் கேப்டனாக இருந்த தோனி கேப்டனாக்கப்பட்டார். அந்தத் தொடரையும் வென்று கொடுத்தார். அதற்குப் பிறகு தோனி கேப்டனான நேரம் பார்த்துதான் கங்குலி, டிராவிட், லட்சுமணன் என இந்திய அணியின் வலுவான பேட்டிங் வரிசை முற்றிலுமாக ஓய்வு பெற்றது. சச்சின் மட்டும்தான் எஞ்சியிருந்தார். அவரும் இரண்டாண்டுகளாக ஒரு சதமடிக்கவே தடுமாறிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் வயது முதிர்ந்துகொண்டிருக்கும் சேவாக் மற்றும் காம்பீர் ஜோடி, சென்ற இடமெல்லாம் சொதப்பியது. ஒரே வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர்கானுக்கும் வயதாகிவிட்டது. பழைய  துடிப்பில்லை.  

இந்தச் சூழலில்தான் அஸ்வின், பிரக்யன் ஓஜா, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் மாதிரியான இளம் பந்துவீச்சாளர்களை உருவாக்குகிறார். இன்னொரு பக்கம் விராத் கோலி,ரவீந்தர ஜடேஜா, புஜாரா, சுரேஷ் ரெய்னா மாதிரியான பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புத்  தந்து உயர்த்துகிறார்.  அதோடு, வெற்றிகளையும் குவிக்கிறார். அதனாலேயே இவ்வெற்றிகள் அசாதாரணமானவையாக ஆகிவிடுகின்றன.

இதுகுறித்து ஒரு பேட்டியில், ‘புதிய இளைஞர்கள் ஓரிரு முறை தோல்வியடைந்து விட்டால், அவர்களை அப்படியே கைவிட்டுவிடக் கூடாது. அவர்கள் மேல் நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கை ஒருநாள் பலிக்கும், அதுதான் வெற்றியைக் கொடுக்கும்’ என்கிறார் தோனி.

தோனிக்கென்று சில சிறப்பம்சங்கள் உண்டு.

நான் பண்ணுறேன் பார்!

மற்ற வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் தோனி. கேப்டனாவதற்கு முன், அதிரடி ஆட்டத்தை கடைபிடித்தே வந்தாலும்  அதற்குப் பிறகு தன்னுடைய பொறுப்பை உணர்ந்து, பொறுமையான பேட்டிங்கில் அசத்தினார். 5 டெஸ்ட்  போட்டிகளில் 2,729 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 5 சதங்களும் அடங்கும். எப்போதும் ஆறாவது விக்கெட்டுக்கு களமிறங்கும் தோனி, எப்போதும் பந்துவீச்சாளர்களான டெயில் எண்டர்களோடுதான் அதிகமாக பேட்டிங் செய்ய வேண்டியதாயிருக்கும். இருந்தும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ரன்களைக் குவிக்க அவர் தவறியதேயில்லை. ஒருதினப் போட்டிகளிலும் அவருடைய சராசரி 51.85.

அனைவருக்கும் உண்டு மரியாதை

அணியின் எந்த வீரராக இருந்தாலும் அவருக்கு உரிய மரியாதையை அளிப்பதில் தோனிக்கு நிகரே கிடையாது. கங்குலி ஓய்வு பெறுவதற்கு முன், தன் கடைசி டெஸ்டில் விளையாடுகிறார். அந்த டெஸ்டுக்கு தோனிதான் கேப்டன். இருந்தாலும் கங்குலியை கௌரவிக்கும் விதத்தில், அந்த டெஸ்ட் முடியும் தருவாயில் எதிரணியின் கடைசி விக்கெட் விழுவதற்கு முன், சில ஓவர்கள் மட்டும் கங்குலியை கேப்டனாக இருக்கக் கூறினார். இதைவிட ஒரு சீனியருக்கு எப்படி சிறப்பு செய்ய முடியும்?

வெற்றி உனக்கு, தோல்வி எனக்கு!

ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் இந்திய அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தபோது, பத்திரிகையாளர் சந்திப்புகளில் கடுமையான கேள்விகளை தோனி சந்திக்க வேண்டியிருந்தது. தோல்வியடையும் நேரத்தில், எந்தக் குறிப்பிட்ட வீரரையும் இவர்தான் காரணம் என்று சுட்டிக்காட்டியதில்லை. அதோடு, தோல்விக்கு தன்னுடைய அணுகுமுறைதான் காரணம் என்பதையும் ஒப்புக்கொள்ளும் தைரியம் தோனிக்கு இருக்கிறது.

கூல்!

எப்படிப்பட்ட இக்கட்டான சூழலிலும் தன்னுடைய அமைதியை மட்டும் இழக்காதவர் தோனி. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் நல்ல ஸ்கோரை விரட்டியது இந்தியா. ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் சரிய... அவரே களமிறங்கி பொறுமையோடு அணியின் ஸ்கோரை உயர்த்தி, இந்தியாவை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றதை இந்தியாவே அறியும். அதோடு, தோல்வியின் விளிம்பில் இருந்தாலும் தன்னுடைய அமைதியை மட்டும் இழந்ததேயில்லை தோனி. அதனால்தான் அவரை, ‘கேப்டன் கூல்’ என்று அனைவரும் அழைக்கிறார்கள்.

காத்திருந்து தாக்கு!

தோனியின் பலவீனமாகச் சொல்லப்படுவது, அவர் எதிரணி தவறு செய்யும் வரை காத்திருந்து பிறகுதான் தாக்குவார் என்பது. அதுதான் அவருடைய பலமும் கூட! ஆட்டம் நம்முடைய போக்கில் செல்லவில்லையென்றால், அதை வலிந்து எதையாவது செய்து ஏடாகூடமாய்க்காமல், பொறுமையாகக் காத்திருந்து தாக்குவதுதான் தோனியின் பாணி. அதுதான் அவருக்கு இத்தனை வெற்றிகளையும் பெற்றுத் தந்திருக்கிறது.

அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா உடனான ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மைக்கேல்கிளார்க்கும் மேத்யூ வேடும் நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கி, கிட்டத்தட்ட 150 ரன்கள் குவித்தனர். தோனி பதட்டமடையவில்லை. காத்திருந்தார் மிகவும் பொறுமையாக... ஸ்கோர் 208 ஆக இருந்தபோது, மேத்யூ வேட் அவுட்டானார். அதற்குப் பிறகுதான் தன்னுடைய அதிரடியை தொடங்கினார். ஃபீல்டிங்கில் மாற்றங்கள் பண்ணினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 208க்கு 5 விக்கெட் என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணி 237 ரன்களுக்குள் சுருண்டது. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

என்னதான் ஆகச் சிறந்த கேப்டனாகவே இருந்தாலும் தோனியின் மீதும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. டெஸ்ட் போட்டிகளில் தவறான அணுகுமுறையை பின்பற்றுகிறார், முன்முடிவுகளோடு வீரர்களை தேர்ந்தெடுக்கிறார், குறிப்பிட்ட சில வீரர்களுக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்பு தருவதோடு சீனியர்களை மதிப்பதில்லை, டி20 போட்டிகளுக்குதான் அவர் லாயக்கு, டெஸ்ட்டுக்கு வேண்டாம் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அண்மையில் ராகுல் டிராவிட் ஒரு பேட்டியில், ‘தோனி டி20 கேப்டன் பதவியை விட்டுவிட வேண்டும். அதை யார் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ள முடியும். ஆனால், தோனி மாதிரி அனுபவமிக்க சீனியர்தான் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருக்க வேண்டும்’ என்றார்.

அது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளக்கூடியதே. தோனி தொடர்ச்சியாக டி20 ஒருதினப் போட்டிகள், டெஸ்ட் என மூன்றுவிதப் போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பதால், அளவுக்கதிகமான மாற்றங்களை தொடர்ந்து தனக்குள் செய்துகொள்ள வேண்டியதாயிருக்கிறது. போட்டிகளுக்கேற்ப தன்னுடைய அணுகுமுறையை அடிக்கடி மாற்ற வேண்டியதிருக்கிறது. டி20 போட்டிகளுக்கு விராத் கோலி போன்ற இளம் வீரரை கேப்டனாக்கலாம். அது தோனிக்கு கொஞ்சம் ஓய்வு கொடுப்பதாக இருக்கும். அதோடு, ஐபிஎல் மாதிரி போட்டிகளிலும் தோனி ஓய்வெடுக்கலாம்.

தோனியிடம் முன்வைக்கப்படும் இன்னொரு பிரச்சினை, குறிப்பிட்ட சிலருக்கே தொடர்ந்து வாய்ப்பளிக்கிறார் என்பது. அதற்கேற்ப இரண்டு சதங்களை அடித்திருக்கும் ஆஜிங்க்ய ரஹானேவும், மனோஜ் திவாரியும் தொடர்ந்து அணியில் புறக்கணிக்கப் படுகின்றனர். இருவருமே மிகச் சிறந்த வீரர்கள். இருப்பினும் அணியில் அவர்களுக்கான இடத்தை சேவாக்கும் கம்பீரும் யுவராஜ் சிங்கும் ரெய்னாவும் பிடித்து வைத்திருந்தனர். இப்போது அந்த இடம் காலியாகிவிட்டதால், எதிர்காலத்தில் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம்.

இந்தியாவில் நடை பெறும் போட்டிகளில் மட்டும்தான் அதிக வெற்றிகளைக் குவிக்கிறார், அவரால் கங்கூலி போல வெளிநாடுகளில் வெற்றி பெற முடியாது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், தோனியின் தலைமையில்தான் முதன்முறையாக இந்திய அணி நியூஸிலாந்திலும், மேற்கிந்தியத் தீவுகளிலும் வெற்றியை ருசித்தது.

சென்ற ஆண்டு மட்டும்தான் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. நம்முடைய ரிடையர்டான சீனியர்களின் மோசமான ஃபார்மும் நல்ல பந்துவீச்சாளர்கள் காயமடைந்ததும்தான் அதற்கு மிக முக்கியக் காரணம்.

இப்போதுதான் இளம் பந்துவீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களும் மலர்கின்றனர். அதுவும் மாறிவிடும் என்று உறுதியாக நம்பலாம். அடுத்த நவம்பரில் தென்னாப்ரிக்காவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்குதான் தோனி தன் விமர்சகர்களுக்கான பதிலைத் தரமுடியும்.

புயல்களைக் கடந்த தோனி!

மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் தோனி. அவருடைய அப்பா பான்சிங், தொழிற்சாலையொன்றில் பம்ப் ஆபரேட்டராகப் பணியாற்றியவர். பள்ளியில் படிக்கும்போது, மிக மிக சுமாரான மாணவர் தோனி. படிப்பு ஏனோ மண்டையில் ஏறவேயில்லை. ஆனால், விளையாட்டு மிகவும் பிடித்திருந்தது.

அரைமணி நேரம் கிடைத்தாலும் மைதானத்தில்தான் வசிப்பார். கால்பந்து மற்றும் பாட்மிண்டன் என்றால், தோனிக்கு அவ்வளவு பிடிக்கும். எப்போதும் விளையாட்டுதான்.

கால்பந்தாட்டப் போட்டிகளில் கோல்கீப்பராக மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடியுள்ளார். பாட்மிண்டன் போட்டிகளிலும் மாவட்ட அளவில் கலந்துகொண்டு, பரிசுகளை வென்றுள்ளார். அதுவரை அவருக்கு கிரிக்கெட்டில் பெரிய ஆர்வமே இருந்ததில்லை. அவருடைய பள்ளி ஆசிரியர் கே.ஆர்.பானர்ஜி என்பவர், அவருடைய நண்பரின் கிரிக்கெட் கிளப்புக்கு ஒரு விக்கெட் கீப்பர் தேவைப்படுவதாக அறிந்து, தோனியை அனுப்பி வைத்தார்.

தோனியின் சுறுசுறுப்பும் பாயும் திறனும் வளைந்து கொடுக்கிற ஆற்றலும் கால்பந்தினைவிட கிரிக்கெட்டுக்கு ஏற்றது என்று பானர்ஜி நினைத்தார். அதோடு, கிரிக்கெட்டில்தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கருதி, தோனியிடம் கிரிக்கெட் ஆட கேட்டுக்கொண்டார். தோனியும் ஆசிரியரின் சொல்லைத் தட்டமுடியாமல், கையில் கிளவ்ஸோடு விக்கெட் கீப்பராக களமிறங்கினார். தோனிக்கு அப்போது தெரியாது, இதுதான் அவருடைய வாழ்க்கையையே மாற்றப் போகிறதென்பது.

தன் முதல்போட்டியிலேயே மிகச் சிறப்பாக விக்கெட் கீப்பராக செயல்பட்டார் தோனி. இதைப் பார்த்த அந்த அணியின் கோச், தோனியை வெகுவாகப் பாராட்டி, அணியிலேயே தக்கவைத்துக்கொண்டார். அதற்குப் பிறகு விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் அதிரடியான பேட்ஸ்மேனாகவும் மிகச் சிறந்த கீப்பராகவும் செயல்பட்டு, அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றார். 1995 தொடங்கி, 1998 வரைக்கும் கமாண்டோ கிரிக்கெட் கிளப் என்கிற அணிக்காக விளையாடினார்.

நல்ல திறமை எங்கிருந்தாலும் அதற்குரிய மரியாதையைப் பெற்றுவிடும். உள்ளூர்ப் போட்டிகளில் தோனியின் திறமையைக் கண்டு, சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் எனும் நிறுவனம் அவருக்கு ஸ்பான்சர் செய்ய முன்வந்தது. தோனி அப்போது முதல்தரப் போட்டிகளில் கூட விளையாட ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்குப் பிறகு 19 வயதிற்குட்பட்டோருக்கான பீகார் அணியில் இடம் பிடித்தார் தோனி. அந்த அணிக்காக சிறப்பாக விளையாடி, கூச் பேகர் டிராபியின் ஃபைனல் வரைக்கும் அழைத்துச் சென்றார். அவருடைய அதிரடி ஆட்டம், ரஞ்சிக் கோப்பைக்கான பீகார் அணியில் இடம் பிடித்துக் கொடுத்தது. அதோடு, ரயில்வேயில் வேலையும் கிடைத்தது. 2001ம் ஆண்டு தொடங்கி, 2003 வரை காரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராகப் பணியாற்றினார் தோனி. கிடைத்த வேலையை ஒழுங்காக செய்ததோடு, கிரிக்கெட்டையும் விட்டுவிடவில்லை.

2003 மற்றும் 2004ம் ஆண்டு ரஞ்சிப் போட்டிகளில் முழுமூச்சுடன் பீகார் அணிக்காக விளையாடினார். இதையடுத்து அந்த நேரத்தில் ஜிம்பாப்வே சென்ற இந்திய அணிக்காக விக்கெட் கீப்பராக தேர்வானார் தோனி. ஜிம்பாப்வேயுடனான ஒரு டெஸ்ட் போட்டியில் ஏழு கேட்ச், நான்கு ஸ்டம்பிங் என அசத்தினார். அதோடு, பேட்டிங்கிலும் அரை சதமடித்தார். இதையடுத்து, பாகிஸ்தான் ‘ஏ’ அணியுடனான போட்டிகளுக்கு தேர்வானார். அதில் ஒரு சதம், இரண்டு இரட்டை சதமென விளாசித் தள்ளினார்.

நயன்மோங்கியாவுக்குப் பிறகு இந்திய அணிக்கு நல்ல விக்கெட் கீப்பர் இல்லாமல் அல்லாடிக்கொண்டிருந்த போது, 21வயது இளைஞரான தோனியின் அதிரடி ஆட்டம் நம் தேர்வுக்குழு மற்றும் அப்போதைய இந்திய கேப்டன் கங்குலியை வெகுவாக ஈர்த்தது. உடனடியாக வங்காள தேசத்துக்கு எதிரான போட்டிக்கு தோனி தேர்வானார். இந்திய அணிக்காக விளையாடும் கனவு பலித்தது.

தனது ஐந்தாவது போட்டியிலேயே வலுவான பாகிஸ்தான் அணிக்கு எதிராக 148 ரன்களை விளாசித் தள்ளினார் தோனி! கிரிக்கெட் உலகமே யாருப்பா இந்தப் பையன் எனத் திரும்பிப் பார்த்தது. சில போட்டிகளுக்குப் பிறகு இலங்கை அணிக்கெதிராக 183 ரன்களைக் குவித்தார். இது இந்திய அணியில் அவருடைய இடத்தினை உறுதிசெய்தது. இன்றுவரை அவர் அடித்த 183தான் உலக அளவில் விக்கெட் கீப்பராக ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ஸ்கோர் என்கிற சாதனையாகத் திகழ்கிறது.

ஐபிஎல்லிலும் வெற்றிதான்

இந்திய அணிக்கு மட்டுமல்ல, ஐபிஎல் போட்டிகளில் நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தோனிதான் கேப்டன்.  இரண்டு முறை சென்னை அணிக்கு கோப்பையைப் பெற்றுத்தந்து, சென்னைக்கு பெருமை தேடித் தந்திருக்கிறார்.

தோனியிடம் கற்றுக்கொள்ள 10 தலைமைப் பண்புகள்
  • தன்னுடைய திறமையை முழுமையாக வெளிக்காட்டி, அணியிலிருப்பவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பது.
  • வெற்றியில் அமைதியாகவும் தோல்வியில் கலக்கமில்லாமலும் இருப்பது.
  • உயர்பதவியில் இருந்தாலும் அடக்கமாக இருப்பது.
  • அணியில் ஒவ்வொருவரையும் சமமாக நடத்துவது.
  • இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பது.
  • புதிதாக செய்துபார்க்க நினைப்பவர்களை ஊக்கப்படுத்துவது.
  • தோற்பவர்கள்மேல், நம்பிக்கை வைத்து வாய்ப்பளிப்பது.
  • வெற்றியை அணியிலிருக்கிற அனைவருக்கும் பகிர்வது, அதைப் பொதுவில் சொல்வது.
  • அணியின் ஒவ்வொருவர் மீதும் நம்பிக்கை வைப்பது.
  • சிக்கலான நேரங்களிலும் தடுமாறாமல் உறுதியான முடிவுகளை எடுப்பது.

ஹெலிகாப்டர் ஷாட்!

தோனி தன் பேட்டைச் சுற்றி, சிக்ஸராக அடிக்கிற ஹெலிகாப்டர் ஷாட் அவருடைய ஸ்பெஷல். தோனியிடம் இதுகுறித்துப் பேசும்போது, ‘சின்ன வயசுல டென்னிஸ் பால்ல, ஊர் மைதானத்துல கிரிக்கெட் ஆடுவோம். அப்போது கத்துக்கிட்டதுதான் இந்த ஹெலிகாப்டர் ஷாட். இதை எனக்கு கத்துக் குடுத்தது, என்னுடைய பள்ளி நண்பன்’ என்கிறார்.

Thanks to PUTHIYATHALAIMURAI

No comments:

Post a Comment