Wednesday, August 8, 2012

என்னய்யா ஆச்சு உங்களுக்கெல்லாம்?


லண்டன்: 5 மேட்ச், அஞ்சும் போச்சு, அனைத்திலும் தோல்வி. என்னாச்சு இந்தியாவுக்கு என்று பதறிப் போய் நிற்கின்றனர் இந்திய ஹாக்கி வீரர்கள்.
ரொம்பக் கேவலமான தோல்விகளைப் பெற்று இந்திய ஹாக்கி ரசிகர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சியுள்ளனர் இந்திய ஹாக்கி அணியினர். ஒரு காலத்தில் உலகையே அதிர வைக்கும் அதிரடி வெற்றிகளைத் தொடர்ந்து குவித்து வந்த இந்திய ஹாக்கி அணி இன்று கண்டுள்ள தொடர் தோல்வி பெரும் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

மொத்தம் 8 முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்த அணி இந்தியா. அசைக்க முடியாத சாம்பியனாக ஒலிம்பிக்கில் ஒத்தை ஆளாக கலக்கி வந்த இந்திய ஹாக்கி அணி லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட ஐந்து போட்டிகளிலும் மகா மோசமான தோல்விகளைச் சந்தித்துள்ளது.
நம்ம வீரர்களுக்கு அடிப்படையே தெரியவில்லை. பிறகு எப்படி இவர்களிடமிருந்து நாம் வெற்றியை எதிர்பார்க்க முடியும் என்று பெரும் வேதனையுடன் கூறுகிறார் முன்னாள் கேப்டன் ஜபர் இக்பால்.
இந்திய ஹாக்கி அணியின் ஒலிம்பிக் வரலாறு சாமானியமானதா... மகா பெரிய சரித்திரம் அது. 1928ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆறு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாதான் அசைக்க முடியாத சாம்பியனாக திகழ்ந்து வந்தது. இந்தியா பெற்று வந்த ஒரே தங்கத்தை பெற்றுக் கொடுத்தது ஹாக்கி அணி மட்டுமே.

இடையில் 1960ல் தங்கத்தை நழுவ விட்ட இந்தியா, வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று முதல் சரிவை வெளிக்காட்டியது. ஆனாலும் விடாமல் 1964ல் மீண்டும் தங்கத்தைத் தட்டியது இந்தியா. ஆனால் 1968, 72 மற்றும் 76 ஆகிய ஆண்டுகள் இந்தியாவுக்கு சோதனையாக மாறியது. முதல் இரு ஆண்டுகளில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்தியா, 76ல் 7வது இடத்தைப் பெற்று அதிர வைத்தது.
ஆனால் 1980ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் வாசுதேவன் பாஸ்கரன் தலைமையிலான இந்திய அணி சிறுத்தை போல பாய்ந்து அத்தனை அணிகளையும் தவிடுபொடியாக்கி மீண்டும் தங்கத்தை வென்று இந்தியர்களை நிமிர்ந்து உட்கார வைத்தது.
ஆனால், அதுதான் நாம் ஒலிம்பிக் ஹாக்கியில் வாங்கிய கடைசிப் பதக்கம், தங்கப் பதக்கம் என்பதுதான் வேதனையிலும் வேதனையாகும். அதன் பின்னர் 1984 முதல் தொடர்ந்து மோசமான இடத்தையேப் பெற்று வருகிறது இந்தியா.
84ல் 5வது இடம் 88ல் 6வது இடம், 99ல் 7வது இடம், 96ல் 8வது இடம், 2000மாவது ஆண்டில் 7வது இடம், 2004ல் 7வது இடம் என சுணங்கி வந்த இந்திய ஹாக்கி அணி, 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறத் தவறி பெரும் கேவலத்தை சந்தித்தது. இப்போது லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அடி மேல் அடியாக ஒரு வெற்றியைக் கூடப் பெறாமல், கிட்டத்தட்ட கடைசி இடத்தை நோக்கி தள்ளப்பட்டுள்ளது.
என்ன தவறு நமது வீரர்களிடம் என்பதுதான் புரியவில்லை. இத்தனைக்கும் வெளிநாட்டு பயிற்சியாளர், ஏகப்பட்ட வசதிகள் என சகல சவுகரியங்களோடும்தான் இந்திய ஹாக்கி அணியைப் பராமரித்து வருகின்றனர். ஆனால் நல்ல வழிகாட்டுதல் இல்லாத அணியாக நமது அணி மாறிப் போயுள்ளது. அது மட்டுமல்லாமல் ஹாக்கி சம்மேளனங்களின் சமீபத்திய பிளவுகள் சண்டைகளும் நமது அணியினரின் வளர்ச்சியை கூறு போட்டு விட்டது.
நமது நாட்டிலேயே அனுபவம் வாய்ந்த எத்தனையோ பேர் உள்ளனர். ஜபர் இக்பால் சொன்னது போல நாம் அடிப்படையை மறந்ததுதான் இந்த தொடர் கேவலத்திற்குக் காரணம். பாஸ்கரன், தன்ராஜ் பிள்ளை, அஜீத் பால் சிங் என முன்னோடிகள் வசம் நமது வீரர்களை ஒப்படைக்க வேண்டும். அதி தீவிர பயிற்சி அளிக்க வேண்டும். வெறியுடன் விளையாட வேண்டும். தங்கம் மட்டுமே நமது கண்ணில் தென்பட வேண்டும், இடையில், சிங்கமே வந்து நின்றாலும் கூட சற்றும் மனம் தளராமல் ஆட வேண்டும். அப்போதுதான் மீண்டும் நமது பெருமையை நாம் மீட்டெடுக்க முடியம்...


Thanks to -thatstamil.com

1 comment: