Monday, June 25, 2012

கேப்டன் கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பையை வென்று இன்றுடன் 29 வருஷமாச்சு!



பெங்களூர்: இந்தியாவுக்கு முதல் முறையாக கிரிக்கெட்டில் பெருமை சேர்ந்த தினம் இது. இதே நாளில், 1983ம் ஆண்டுதான் முதல் முறையாக 'ஹரியானா சிங்கம்' கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி, மேற்கு இந்திய 'மகா சிங்கம்' மேற்கு இந்தியத் தீவுகளை நையப்புடைத்து உலகக் கோப்பையை வென்று வந்த தினம்.
யாருமே எதிர்பார்த்திராத ஒரு வெற்றி அது... ஆனால் கபில்தேவும், அவருடைய சில சகாக்களும் அத்தனை பேரையும் ஏறி மிதித்து வந்து கோப்பையைக் கைப்பற்றிய போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கே அளவே இல்லை... இப்போது நினைத்தாலும் புல்லரிக்க வைக்கும் அமோகமான வெற்றி அது.
லார்ட்ஸ் மைதானமே அன்று விழாக்கோலம் பூண்டது. ஒரு பக்கம் இந்தியா சாம்பியனா என்ற அதிர்ச்சி அலைகள், மறுபக்கமோ, நம்ம இந்தியாதான் சாம்பியன் என்று மைதானத்திற்குள் வெள்ளமென பாய்ந்து வந்த இந்திய ரசிகர்களின் உற்சாகப் புயல். லார்ட்ஸ் மைதானமே அதை நினைத்து இன்று கூட ஆச்சரியப்படும்.
டேவிட்டுககும், கோலியாத்துக்கும் இடையிலான சண்டை என்றுதான் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணி இடையிலான அந்த உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டியை வர்ணித்தார்கள். காரணம், அப்போது இந்தியா கிரிக்கெட்டில் ஒரு சுண்டெலியாகத்தான் இருந்தது. ஆனால் மேற்கு இந்தியத் தீவுகளோ அசைக்க முடியாத மகா சிங்கமாக வீற்றிருந்தது. ஆனால் கபில்தேவ் தனது அபாரமான புத்திசாதுரியத்தால் மேற்கு இந்தியத் தீவுகளை சாய்த்து அனைவரையும் அதிர வைத்தனர் கபில்தேவும், அவருடைய சகாக்களும்.


அது 3வது உலகக் கோப்பையாகும். முதல் இரு கோப்பைகளையும் மேற்கு இந்தியத் தீவுகள் வென்றிருந்ததால், 3வது முறையும் அதுவே சாம்பியனாகும் என்றுதான் அத்தனை பேரும் நினைத்திருந்தனர். 3வது உலகக் கோப்பைக்கு புரூடென்ஷியல் கோப்பை என பெயரிட்டிருந்தனர்.
1983ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி சனிக்கிழமை நடந்த அந்தப் போட்டியின் முடிவைக் காண ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் காத்திருந்தது.
கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி தனது அட்டகாசமான ஆட்டத்தால் மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்திய அந்த தருணம் ஒட்டுமொத்த இந்தியாவும், குதூகலித்தது.
இறுதிப் போட்டியின் சில துளிகள்...
இங்கிலாந்தில் நடந்த 3வது உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தம்8 அணிகள் கலந்து கொண்டன. 27 போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு அணியும் 60 ஓவர்கள் ஆட வேண்டும். நீளமான போட்டிதான்.
இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. மேற்கு இந்தியத் தீவுகள் கேப்டன் கிளைவ் லாயிட் டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்யப் பணித்தார். அவரது கணிப்பு சரியாகவே இருந்தது. மேற்கு இந்தியத் தீவுகளின் தீப்பொறி பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா.
இந்தியத் தரப்பில் முதல் ஆளாக அவுட்டானவர் சுனில் கவாஸ்கர். வெறும் 2 ரன்களை மட்டுமே அவர் எடுத்தார். ஆண்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங் என மேற்கு இந்தியத் தீவுகளின் ஜாம்பவான் பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்டிங்கை நசுக்கி பிதுக்கி விட்டனர்.
ஸ்ரீகாந்த் சேர்த்த 38
இந்தியத் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீகாந்த் மட்டும் 38 ரன்களைச் சேர்த்திருந்தார். அவ்வளவுதான் இந்தியா, எங்கே கோப்பையை வெல்லப் போகிறது என்றுதான் அத்தனை பேரும் நினைத்திருந்தனர்.
பலே பலே சந்து
ஆனால் நடந்தது வேறு..இந்தியாவின் பந்து வீச்சை மிக அழகாக திட்டமிட்டு பயன்படுத்தினார் கபில் தேவ். பல்வீந்தர் சிங் சந்து ரூபத்தில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சனி வந்து சேர்ந்தது. அபாயகரமான ஓபனரான கார்டன் கிரீனிட்ஜை சந்து அவுட்டாக்கிய விதம் இன்று நினைத்தும் வியப்பைத் தரும்.
ஒரே ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் கார்டன். அதன் பிறகுதான் இந்தியாவுக்கே நம்பிக்கை வந்தது. அதேபோல வி்வ் ரிச்சர்ட்ஸ் அடித்த பந்தை பின்னோக்கி நகர்ந்து கபில் தேவ் கேட்ச் செய்த விதம் அத்தனை பேரையும் அசரடி்ததது.
படு வேகமாக ஆடிக் கொண்டிருந்த ரிச்சர்ட்ஸ் இப்படி அவுட்டாகிப் போனதால் இந்தியாவுக்கு மேலும் நம்பிக்கை அதிகரித்தது.
மொஹீந்தரின் 'மோகினியாட்டம்'
அதன் பிறகு வந்து சேர்ந்தது மொஹீந்தர் அமர்நாத்தின் 'மோகினியாட்டம்'. அபாரமாக பந்து வீசிய அவர், மேற்கு இந்தியத் தீவுகள் வீரர்களை நிலை குலைய வைத்தார். 3 முக்கிய விக்கெட்களை அவர் வீழ்த்தியதால் இந்தியாவின் கை ஓங்கியது, 'கப்'பும் கச்சிதமாக வந்து சேர்ந்தது. இறுதியில் ஆட்ட நாயகன் அவரே. வெறும் 12 ரன்களை மட்டுமே கொடுத்தார் அமர்நாத் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் மதன்லாலும் தன் பங்குக்கு 3 விக்கெட்களைத் தூக்க மேற்கு இந்தியத் தீவுகள் அணி சரணடைந்தது. 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தனது முதல் உலகக் கோப்பையை கையில் ஏந்தியது.
இப்படி கபில் தேவ் தலைமையில் இந்தியா தனது முதல் உலகக் கோப்பையை வென்ற தினம் அது. அதன் பிறகு இன்னொரு கோப்பையைப் பெற இந்தியா 28 வருடங்கள் காக்க வேண்டியதாகப் போயிற்று.
நிச்சயம் இந்திய ரசிகர்களுக்கு இது பொன்னாள் - கபில் தேவ் போன்ற ஜாம்பவான்களைப் பற்றி கொஞ்சமாச்சும் நினைத்துப் பார்க்க வேண்டிய நன்னாள்...!

No comments:

Post a Comment