Monday, August 22, 2011

படித்ததில் பிடித்தது.................

சட்டங்களும் நஷ்டங்களும்

காலங்கார்த்தாலே போலீஸிடம் மாட்டுவேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை.

அன்று காலையில் கிளம்பும் போதே பயங்கர லேட்டாய்த்தான் கிளம்பினேன். பைக்கில் பறந்தடித்துச் சென்றாலும் கவுண்டம் பாளையத்திலிருந்து சரவணம் பட்டிக்கு இருபது நிமிடம் ஆகும். ஒன்பது மணிக்குள் கண்டிப்பாய் கார்ட் பஞ்ச் பண்ண முடியாது என்று தெரிந்தும், ஒரு சான்ஸ் பார்க்கலாம் என்று வேகமாய்ப் பறந்து கொண்டிருந்தேன். ஜி.என்.மில்ஸ் தாண்டி ரயில்வே க்ராஸிங் தாண்டும் போது பள்ளிக்கூட யூனிஃபார்மில் இருந்த இரண்டு சிறுவர்கள் லிஃப்ட் கேட்டுக் கையை நீட்டினார்கள்.

நிற்க நேரமில்லாமல் வேகவேகமாய்ப் போய்க் கொண்டிருந்த நான், பள்ளிச் சிறுவர்கள் என்றதும் பிரேக்கை மிதித்தேன். பார்த்ததுமே தெரிந்தது. அண்ணன்-தம்பி… அண்ணன் ஏழாம் கிளாஸும் தம்பி ஆறாம் கிளாஸும் படிக்கிறார்களாம்.

பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய பஸ்ஸை மிஸ் செய்து விட்டதாலும், மிக லேட்டாகி விட்டதாலும் கொஞ்சம் அவசரமாய் வெள்ளக் கிணறு பிரிவில் இறக்கி விட்டால் போதும் என கெஞ்சும் நிலையில் கேட்டுக் கொள்ளவே பைக்கில் இருவரையும் உட்காரச் சொல்லி திராட்டிலைத் திருகினேன்.

மூன்று நிமிடம் இருக்கும். அடுத்த க்ராஸிங்கைக் கடக்கும் சமயத்தில் அந்த ட்ராஃபிக் போலீஸ் ஸ்குவாட் விசிலடித்துக் கூப்பிட்டதை சத்தியமாய் நான் கவனிக்கவில்லை. அடுத்த இரண்டாவது நிமிடம் ஒரு கான்ஸ்டபிள் எங்களை விரட்டி மடக்கி வண்டிச் சாவியைப் பறித்தபோது, அரை கிலோமீட்டர் தாண்டியிருந்தேன். “வண்டியைத் தள்ளிட்டு வாப்பா. இன்ஸ்பெக்டர் கூப்பிட்டாரு. மூணு பேரும் வாங்க..!” சொல்லியபடியே தான் வந்த வண்டியைத் திருப்பினார் கான்ஸ்டபிள்.

கடுப்புடன் திரும்பி நான் அந்தச் சிறுவர்களைப் பார்க்க, “ஸாரிண்ணா..!” என்று சங்கடத்துடன் தலையைக் குனிந்தபடி வந்தாலும், சிறுவர்களின் முகத்தில் பள்ளிக்கு லேட்டாவதின் பயம் தெரிந்தது.

வண்டியைத் தள்ளியபடி அந்த இன்ஸ்பெக்டர் இருந்த இடத்திற்கு வர கால் மணி நேரம் ஆகிவிட்டது. ஒரு டெர்ரரிஸ்ட்டைப் பிடித்த பெருமையுடன் என்னைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ரொம்பக் கறாராய்,

“ட்ரிபிள்ஸ். நிக்காமப் போனா விட்டுடுவமா.? பீக் அவர்ஸ். முந்நூற்றைம்பது ரூபாய் ஃபைன். நிக்காம போனதுக்கு ஒரு இருநூத்தைம்பது. ஆக மொத்தம் அறு நூறு எடுப்பா..!”.

ஒரு உதவி செய்யப் போய் அலுவலகத்துக்கு லேட்டாவதுடன், அறுநூறு ரூபாய் தண்டம் வேறு. நான் திரும்பி கோபமாய் அந்தச் சிறுவர்களைப் பார்க்க, அதில் பெரியவன் தைரியமாய் அந்த இன்ஸ்பெக்டரிடம் பேச ஆரம்பித்தான்.

“சார் இந்த அண்ணன் மேல ஒண்ணும் தப்பு இல்ல சார்… நாங்கதான்.! அதோ அங்கதான் சார் லிஃப்ட் கேட்டோம். பாவம் சார் இந்த அண்ணன்.. விட்டுங்க. ஸ்கூலுக்கு வேற லேட்டாகுது சார்..!”.

அந்த இன்ஸ்பெக்டர் திரும்பி, “தம்பி சும்மா இரு. ஃபைன வண்டிய ஓட்டினவங்கதான் கட்டப் போறாங்க. உனக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல.!” என்று சொல்லிவிட்டு எனக்கு முன்னால் இருந்தவர்களுக்கு ஃபைன் ஷீட் எழுதுகிறேன் என்று வசூலைத் தொடர்ந்தார். “இல்ல சார். அந்த அண்ணன் மேல தப்பு ஒண்ணுமில்ல..” அந்தச் சிறுவன் மறுபடி துவங்க, கடுப்புடன் திரும்பிய இன்ஸ்பெக்டர் கத்தினார். “நிறுத்துடா நாயே.! யார் மேல தப்புனு சொல்லற அளவுக்கு பெரிய புடுங்கியாடா நீயி.? வாய மூடிக்கிட்டு நில்லு. ஏதாவது சொல்லிடப்போறேன்.!”.

அத்தனை பேர் முன்னால் அவமானப்பட்ட வலியுடன் கண்கள் கலங்க அவன் திரும்பி என்னைப் பார்க்க, நான் அவனை ஏதும் பேச வேண்டாம் என சைகை செய்துவிட்டுக் காத்திருந்தேன். அதற்கப்புறம், மேலும் பத்து நிமிடம். இருநூறு ரூபாயில் பேரம் முடிந்து. அதே சிறுவர்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு, இனி வாழ்க்கையில் எவனுக்கும் லிஃப்ட் கொடுப்பதில்லை என்ற முடிவுடன் அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.

இந்தப் பதிவின் நோக்கம் ட்ரிபிள்ஸ் போகாதே, போலீஸ் ஊழல், உதவி செய்யாதே என்று எதுவும் சொல்வது அல்ல. ஐந்தாவது நிமிடம் அந்தச் சிறுவர்களை வெள்ளக் கிணறு பிரிவில் இறக்கி விடும்போது நடந்ததுதான் நான் சொல்ல வந்தது.

வண்டியை விட்டு இறங்கியதும், “பார்த்து போங்கப்பா..!” என்று சொல்லிவிட்டு ஆக்ஸிலரேட்டரை முறுக்க எத்தனித்த போது அந்த ஏழாம் வகுப்புப் பெரியவன் கூப்பிட்டான்.

“அண்ணா..!”

“என்ன.?” என்பது போல் நான் திரும்பிப் பார்த்ததும் அவன் தொடர்ந்தான்.

“சாரிண்ணா… இப்பிடி ஆகும்னு தெரியலைண்ணா. எங்களால உங்களுக்கு இருநூறு ரூபா நஷ்டம். அண்ணா… எங்கிட்ட அவ்வளவு பணம் இல்ல. நாங்க ஸ்கூலுக்கு வந்திட்டு போக எங்க அப்பா கொடுத்த இருபது ரூபா இருக்குண்ணா. இத நீங்க வாங்கிக்கணும்..!” என்றவன் நீட்டிய கையில் இரண்டு பத்து ரூபாய்த் தாள்கள் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தன.

3 comments:

  1. கொஞ்சம் பொருங்க தினேஸ் வாசித்துவிட்டு கொமன்ட் எழுதுறன்

    ReplyDelete